September 13, 2017

சென்ரியூ

1.
கைநாட்டு மனிதனுக்கு
பிச்சைப் போட்டு
திருவோடு ஏந்துகிறான்
வெள்ளை சொக்கா வேலைக்காரன்..

#இன்றைய_அரசியல்_நிலை

2.
கல்லறையில் மலர்வளையம்
உறங்கும் மனிதனுக்கா
இல்லை இன்று
மருண்டு கெடக்கும் மலர்களுக்கா..

3.
மல்லிகையின் நறுமணம்
விதவைக்கு கிட்டியது
நேற்றைய மறுமணத்தில்..

4.
ரத்தம் அவனுக்கென்றால்
பரிவு பாசம் ..
அதே எனக்கென்றால்
கேலிப்பார்வை..
மலரான மொட்டின் முதல் குமுறல் 

September 1, 2017

கூ.. கூவம்.. கூடாரம்..

கூ.. கூவம்.. கூடாரம்..

கள்ளாட்ட கட்சிக்குள்ளே
கலைபட்டுக்கிடக்கிறது
கதிராமங்கலம் ..

கருக்கும் தீ அங்கு
கருவறுக்க தானோ..
கனவோடு பிறந்த உயிர்கள்
கவலையோடு மறையதானோ..

கதிரருக்கும் கைகளுக்கும்
கட்டாயம் விலக்கில்லை
கடனென்னும் சொத்தோடு
கழுத்தறுத்து உயிரில்லை

குறையில்லா நாடின்று
குழிக்குள்ளே கிடக்கிறது
கல்வித்தரம் குறையுண்டு
கடனோடு கிடக்கிறது

கிடத்தியவன் கேணையென்னில்
கலியுகம்தான் தொடங்கியதோ
கயவனவன் கட்சிதனில்
கலர்கலராய் மலர்கிறதோ

குறைகூறும் கெழவிக்கும்
கூழுக்கு வழியில்லை
கூட்டத்துக்கு போனாளென்றால்
கறிசோறும் மறுப்பதில்லை

கள்ளிப்பால் காலம்போயி
கட்சினாலே மறைகின்றோம்
கேக்காத காதுகளுக்கு
கையில் மையிட்டு அழைக்கின்றோம்

கூடாரம் போட்டுக்கிட்டு மக்களை
கோமாளி ஆக்கியதேன்
கூவத்தூர் கொண்டாட்ட
குழுவிங்கு அடுத்தயிடம் தேடியதேன்

கூரில்லா நாட்டுக்குள்ளே
குதிரோட்டம் விட்டவனெவனோ
கூவநதி கரையினிலே
கழிவுகளை விட்டவனவனோ

கச்சத்தீவும் கிடைக்கவில்லை
கடல்சென்ற மீனவனும் கரையிலில்லை ..
காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்தது போதும்
களையான ஆட்சிக்கு முற்றொன்று வைத்திடுவோம்

- சுகி 

August 28, 2017

தீ பந்தம்

என் கண்ணீரைகேக்கத்தான்
நாதியில்லை ஊருக்குள்ள
உங்கிட்ட கொஞ்சம் சொல்றேன்
காதுகொடுத்து கேளுமய்யா..

உச்சாணி கொண்டையில
உஷ்ணத்தை வெச்சிருக்கேன்
ஊருக்குள்ள ஒண்ணுன்னா
உனக்குமுன்ன நானும்வாரேன்
நல்லதென்ன கெட்டதென்ன
நடுநிலைய இருக்கமாட்டேன்
உதவின்னு கேட்டுபுட்டா
உசுரையும் தந்திடுவேன்
பச்சைத்தண்ணி பாத்தபோதும்
பயத்துல நான் நடுங்க
படுபாவிமக்க யாரும்
இங்க என்ன புரிஞ்சுக்கல..

நேத்து வந்த கிராதகிக்கு
பல்லிளிச்சு பாத்தீங்களே
தேவைக்கு என்ன நிறுத்திப்புட்டு
தேவதைனு அவகிட்ட போறீங்களே
கட்டையில போறப்போ
அவ கூட சாவாமட்ட
கடைசிவரை நான் வந்து
என் உசுரையும் தந்திடுவேன்
முறைக்காக வெச்சாலும்
மனசார பாத்திடப்பா
அப்போதான் என் கட்டை
முழுசாதான் எரியுமப்பா...

சேரி சாவுக்கு நேரமாச்சு
நான் இப்போ போகோணும்
பந்தமெங்க பந்தமெங்கனு
கவலை குரல்கேக்குதப்பா.. !!

இப்படிக்கு "தீ பந்தம்"

- சுகி

August 23, 2017

காதல் சுரப்பியா ? காதல் உணர்ச்சியா ?

காதல் என்றால்
என்னவென்று தெரியாத 
ஆய்வுக்கூடங்கள் பல இருக்க ..
அரைநொடி பார்வையில் 
அனைத்தையும் புகுத்திடும்
மாயை இந்த காதல் !

கள்ளமில்லா கன்னிக்கும்

அவள் கதை தொடுத்த காவியனுக்கும்
கொஞ்சம் கொஞ்சமாய் 
எரிமலையாய் 
கக்கும் இந்த உணர்வுகளுக்கு 
உயிரே இந்த காதல் !

நெடுநாள் பழக்கமோ 

முன்ஜென்ம தொடர்போ
இல்லை 
பார்த்ததும் படர்ந்ததோ
ஏதவாயிருப்பின் 
முரணின்றி மேடைபோட்டு 
முத்தார சிரிக்கிறது 
இந்த காதல் ! 

உறவுகளை உடைத்து,

உணர்வுகளை தொடுத்து,
உடைமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்தது தான் 
இந்த காதல் !!

காதல் முழுதாய் 

உணர்ச்சியால் முகம்காட்ட 
சுரப்பிகள் மறந்து 
உணர்வுகள் பிறந்து 
சூட்சமாய் சொல்லினிக்க
செவுடனுக்கும் ஒலிகேக்கும் 
குருடனுக்கு விழிகிடைக்கும்..

காதல் பூப்போலே 

உணரத்தான் தொடவேண்டும் 
நுகரத்தான் மனம்வேண்டும்

சுரபிவழி வந்திருந்தால் 

முடிவில்லா காதலுக்கும் 
முதுமையிலே பிறப்பேது ?
முகம்பார்த்து மலர்வதுக்கும்
சுரபியிலே கெடுவுமுண்டு..

உணர்ச்சிபால் வரும்காதல் 

உடல்பார்த்து வருவதில்லை 
உணர்வோடு உருக்குலைந்து 
ஊக்கமதில் வாழ்வதுண்டு..

பிள்ளையாருக்கு பிறந்தநாள்


பிள்ளையாரே பிள்ளையாரே
பிறந்தநாளாம் உமக்குஇன்னிக்கு
முதல் கடவுள் முகத்தானே
முதல் வாழ்த்து நானும் சொல்லேன்

எருக்கம்பூ நாயகனே
இரக்கம் கொஞ்சம் காட்டுமய்யா
எழுத்துப்பிழை கூடாதுனு
சுழி போட்டு துவங்க போறேன்

புத்தாடை போடணுமுன்னு
பட்டாடை கேப்பீரோ
பலவண்ண மெழுகேத்தி
பகட்டா தான் மகிழ்வீரோ

கரிமுகத்து கணபதியே
கடைதிறக்க வாரீரோ
நான்செஞ்ச தின்பண்டம்
திகட்டும் வரை உண்பீரோ

உப்பென்ன இனிப்பென்ன
விதவிதமா உங்கத்தாரேன்
கொலு கொலு புள்ளைக்கு
கொழுக்கட்டை புடிச்சு தாரேன்

கனியுண்ணும் ஆசையிலே ஆறுமுகனை
மலையேத்திய ஐந்து கரத்தானே
பால்கனி படைச்சிருக்கேன்
பானைவயிறு நிரம்பும்வரை வயிறார உண்ணும்மய்யா

முருகனுக்கு மூத்தோனே
முரண்டுபிடிக்காம வாருமய்யா
நீ போட்ட முடியெல்லாம்
நீக்கத்தான் வேணும்மய்யா

சதுர்த்தி நாயகனே
சங்கடத்தை தீர்க்கத்தான் நீயும் இங்கு வாரீரோ
சங்கத்தமிழ் வளர்த்த மண்ணில்
செம்மொழி செழிக்க செய்வீரோ

- சுகி


July 13, 2017

~~** ( திருவிழா ஸ்பெஷல் ) **~~



சக்தி மாரியம்மா
சங்கடத்தை தீர்க்கவரா
சித்திர மாசம்பூரா
சீராட்டி பாக்கப்போறா

எங்கூரு நோம்பிக்கு
எல்லாத்தையும் கூப்பிட்டுப்புட்டேன்
நாலுகிழமை நடக்கும் பூசை
சுத்தவத்தம் வேணும் புள்ளை

மொத ஞாயிறு கெடாவெட்டி
நடுஜென்மம் நேரத்துல
ஊருஆம்பளைங்க ஒன்னுகூடி
முனியெல்லாம் ஓட்டிவிட

பொழுதொன்னு விடிஞ்சதுமே
பொட்டப்புள்ள நான் கேட்க
பூசாரி வான்பார்த்து போட்ட சோறு ( ரத்தசோறு )
முனி பூரா எடுத்துகிச்சு
ஊருஎல்லை பூராவும் கெட்டதெல்லாம் விலகிடுச்சு

மொதவாரம் மூணாம்நாலு (செவ்வாய் கிழமை )
ஊருசனம் ஒன்னுகூடி
எல்லாவீட்டு பொறி போட்டு
ஆத்தாளுக்கே அழைப்புவிட

மறுவாரம் மூணாம்நாலு
மங்கலமா ஆரம்பிக்க
ஆலமர கொம்பெடுத்து
கம்பம் ஒன்னு செஞ்சிபுட்டு
தீச்சட்டி அதுலேத்தி
ஆத்தாள அழைச்சிடுவோம்

சாய்ங்காலம் பூசையோட
மத்தளத்தை நிறுத்திப்புட்டு
ஊருசனம் சேந்ததுமே
பறையோட பாட்டுபடிச்சு
கம்பம் சுத்தியாடிடுவோம்

கிராமிய பாட்டுக்கும்
சலங்கையொலி ஆட்டத்துக்கும்
மணியங்கு பன்னண்டு அடிக்க
கச்சேரியை முடிச்சிடுவோம்

இந்த இடைப்பட்ட நாலு பூரா
காஞ்சி காமாச்சி
மதுர மீனாச்சினு
விதவிதமா அழைச்சிடுவோம்
பழமென்ன பூவென்ன
பணமென்ன பாலென்ன
பலகாரம் பலசெஞ்சு
பத்திரமா பாத்துக்குவோம்

மூணாம் வாரத்துல
மொதநாளு மொழுகிவிட்டு
ரெண்டாம்நாலு பூப்பறிச்சு
தொடர் மாலை வேணுமுன்னு எல்லாரும் பூக்கட்ட
ஊரு மனுஷன் முன்னின்னு
ஆத்தாளுக்கு வேணும்கிறதா
பக்குவமாய் பாத்துக்கிட

மூணாம் நாலு ராத்திரிக்கு
செட்டு லைட்டு ஜொலிஜொலிக்க
வெள்ளைக்குதிரை கூட்டிகிட்டு
கோயிலுக்கு கிழக்கால
ஆத்தாவுக்கு நகையெடுக்க

பரிமீது வந்த ஆத்தா
கடையுட்டு வரமாட்டா
ஆத்தாள மனங்குளிர
பாட்டோடு அழைச்சு வர
ஒரு வழிய சேர்த்திடுவா
அலங்காரத்தை தொடங்கிடுவா

திருவிழா ஊருக்குள்ள
வீரமகளா வந்திடுவா
ஊருசனம் ஒன்னொன்னையும்
கண்கூட பாத்திடுவா

ஊட்டுக்கொரு பொங்கலுனு
ஒருபானை பொங்கிதல்ல
வகைவகையா ருஷிருஷியா
பச்சமாவும் இடிச்சிடுவோம்

உச்சி வெயிலோட
மொளப்பாரி எடுத்துக்கிட்டு
பொங்கலும் பச்சமாவும்
பாசத்தோடு தூக்கிகிட்டு
ஊருசனம் சேர்த்ததுமே
கும்மியொன்னு அடிச்சிடுவோம்

பொழுதெறங்கும் நேரத்துல
நேர்த்திக்கடன் தீக்கணுமுன்னு
தீச்சட்டி தூக்கிக்கிட்டும்
செல்லுக்குத்தி ஆடிக்கிட்டும்
வாயில சூலத்தோட
வந்திங்க வணங்கிடுவோம்

மறுநாளு மஞ்சத்தண்ணிக்கு
மாமனெல்லாம் வந்து சேர
மொறப்பொண்ணு நாங்கெல்லாம்
மறைஞ்சு இருந்தே பாத்திடுவோம்
அக்கா மகளுக்கும் அள்ளிப்பூசிடுவோம்
அன்போடு மொறைசேர்த்து
ஆசையோட நெனஞ்சிடுவோம்

மறுப்பூசை வெச்சுப்புட்டு
பஞ்சாமிர்தம் கடைஞ்சுக்கிட்டு
ஊருப்பூர சொல்லிடுவோம்
பொழுதெரங்க குடும்பத்தோட
கோயில்கிட்ட வாருமைய்யா

நாலாம் வாரத்தோட
நோம்பி இங்க முடிஞ்சாலும்
நன்றி சொல்லி வணங்கிடுவோம்
நல்லதாயி உன்னால
நாங்களும் குளிர்ந்துட்டோம்
நாட்டுமக்க நலன் காக்க
நாடெங்கும் பாத்திடம்மா !!

- சுகி

கிட்டத்தட்ட ஒரு மாசம் திருவிழாவின் முக்கியநிகழ்வ மட்டும் சொல்லிருக்கேன்.. கொஞ்சம் பெருசா படிச்சாலும் திருவிழா போன நெனப்பு உங்களுக்கும் வந்துடும் னு நம்புறேன்.. எங்கூரு திருவிழாவை வந்து ரசிச்ச எல்லாருக்கும் நன்றி  🙏🙏🙏

July 10, 2017

யார் இந்த மலாலா ??


மிங்கோரா பெண்ணொருத்தி
மீட்டெடுத்த மெழுகுவர்த்தி
ஆண்களின் கொடுமைக்கு 
முடிவிட்ட வெட்டுக்கத்தி


தீவிரமாய் வாதிட்ட
தீயவனின் குண்டுக்கு
வாதத்தால் முற்றிட்ட
தீப்பிளம்பு தீர்க்கதரிசி
ஆணென்னும் அதிகாரம்
அரங்கேறும் வேலையினில்
புயலோடு போராட
முளைத்திட்ட முல்லையிவள்
சிதறிய உடல்களையும்
சீரில்லா உயிர்களையும்
சிந்தனையில் சேர்த்தி
ரத்தக்களமேறி
ராட்டின வாழ்விற்கு
முற்றொன்று வைத்தவள்
கலவிக்கு பெண் தேடும்
சமூகத்தில்
கல்விக்கும் கொடிஉயர்த்திய
அல்லாஹ்வின் திருமகள்
தலிபான் தடைகளுக்கு
தைரியத்தால்
பதில் உரைத்த
தங்கப்பெண் தாரகையிவள்
பசி என்று நின்னாலும்
பயத்தோடு உறைந்தாலும்
பட்சிபோல் பார்த்திரிந்து
பிஞ்சுக்கை தொடுப்பவள்
அல்லா விட்டு சென்ற
பிறை நிலா
பெண்மைக்கு சான்று
என் பெண்மை மலாலா !!
- சுகி

மலரென்னும் மங்கையவள்

செங்காந்தள் பூப்போலே 
செம்மேனி உடையவளோ 
ஆம்பல் நிறம்போலே 
அள்ளித்தரும் தாரகையோ 
அனிச்சம் பேர் இவளோ
அன்புக்கு சான்றிவளோ
காற்றாலை போல் வீசும் 
குவளை மணம் கொண்டவளோ 
குறிஞ்சி பூப்போலே 
கொஞ்சிடும் பைங்கிளியோ
வெட்சி மலராலே
வெட்கத்தில் திளைப்பவளோ 
செங்கோடுவேறினை போல்
செழுமையில் பிறந்தவளோ 
தேனிலே கலந்த புளிப்பாய்
தேமாவாய்  திகள்பவளோ
மலர்சூடும் மன்னனுக்கு 
மணிசிகையாய் வாழ்பவளா 
உந்தூழ் காம்பை போல் 
உறுதுணையாய் நிற்பவளோ 

கூவிளம் மலர்போலே
கூர்நோக்காய் காண்பவளோ 
ஏறுழம் பூப்போலே 
எதிரியினை எரிப்பவளோ
சுள்ளிக்கு ஈடுஇணையாய்
சுற்றத்தோர் ரசிப்பவளோ 
கூவிரம் பலன்போலே
குடும்பத்தை காப்பவளோ 
வடவனமாய் இல் நின்று 
பிணித்தானாய் போப்பவளோ 
வாகை மலர்சூடி 
மன்னவனை அழைப்பவளோ 
வான் பூங் குடசமாய் 
வறுமையிலும் வெல்பவளா
எருவைபுல்போலே 
எறும்பாய் உழைப்பவளோ 
சங்குப்பூக்கள் 
செருவிளை கருவிளை போல் 
இன்முகத்து பைரவியாய் 
பலம் சேர்க்கும் பைங்கிளியோ



July 7, 2017

நல்லதொரு விடியலை நோக்கி..

அஞ்சு பத்து சம்பாதித்தவன்
அயராமல் உறங்குகிறான்..
ஆயிர கணக்கில் சம்பாதிப்பவன்
ஆடிப் போயி கிடக்கிறான்..
இந்திய அரசின் அதிரடி மாற்றத்தால்
இஷ்டப்படி ஆடியவனும் இடிதாக்கிய மரமாய் நிற்கிறான்..
ஏடிம் சாலைகளில் ஈயாய் மொய்கிறான்
இயன்றவற்றை செல்லும் 'மணி'களாய் மாற்றிட..
தடாலடியாய் கொண்டு வந்த சட்டத்தால்
தடம் புரண்டு தான் கிடக்கிறது நடுத்தர வர்க்கம்..
ஏழாந்தேதி வாங்கிய சம்பளத்தில்
சரளாமாய் இல்லாவிட்டாலும்
சிறிதாய் வைத்த சேமிப்பும்
இன்று செல்லா காசுப் பட்டியலில்..
உண்டியலாய் கிடந்த சர்க்கரை டப்பாவும் புடவை மடிப்புகளும்
சத்தமின்றி வெளி வரப்போகிறது
சில்லரைகளாய் மாற்றிட..
வாயாடி கிழவிகளுக்கு
வெற்றிலையாய் இன்றைய விடியல்..
வசைப் பாடியே தின்று தீர்ப்பார்கள்
அரசாளும் அதிகாரிகளை..
சுருக்கு பை நோட்டுகள் யாவும்
சுவடில்லாமல் மறையும் வரை..
புதுமையாய் தெரிந்தாலும்
புயலாய் மாற்றினாலும்
மாசற்ற சமுதாயத்துக்கு
நாமும் கரம் கொடுப்போம்
நல்லதொரு விடியலை நோக்கி..
- சுகி
உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்,
"கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல"
"என்னோடு இருக்கும் கவலைகளும் தீர்ந்து விடும்"
என்னுள் எழும் சங்கடங்களை
சல்லடையாய் நீக்கி
சந்தோஷத்தை தந்தவன் நீ..
ஒற்றை பார்வை போதும்
உன்னை அன்பாய்
என்னிடம் அழைத்து வர...
அலைந்து தொலைந்தாவது
கண்டு கொள்வாய்
உன்னவள் இருக்கும் இடத்தை..
அள்ளி அணைத்து கொள்ள தோன்றும்
அன்பாய் நீ அருகினில் வரும்
நொடித்தோறும்..
தினந்தோறும் சந்தித்த நாட்கள்
மாறி மாதம் ஒருமுறை சந்தித்தாலும்
மங்காமல் ஒளிக்கிறது உன் அன்பு என்றும் ...
சிறு பிள்ளையாய் தான்
மாறி போனேன்
சீண்டி நீ ஆடும் ஆட்டத்தில்...
கள்ளமில்லா உன் அன்பில்
கரைந்தே போகிறேன்
கண் இமைக்கும் நொடித்தோறும்..
கலக்கத்தோடு காத்திருக்கிறேன்
உன் அணைப்பில்
என் சோகத்தை கலைத்திட..

- சுகி



என் வீட்டு செல்லப் பிராணியின் நினைவில்.. Image may contain: one or more people, people sitting, dog, text and outdoor

July 6, 2017

முரணாய் ஒரு முத்தம் !!


அன்னையின் அரவணைப்பில்
அன்பாய் ஒரு முத்தம்
தங்கமென்ன அழைக்கும்
தாத்தாவின் தாங்குதலில்
ஆசையாய் ஒரு முத்தம்
பள்ளிக்கு முன்
பரவசத்தில் முத்தம்
விளையாட்டு கொஞ்சலில்
வரிசையாய் முத்தம்
பிஞ்சில் கைகோர்த்த
உடன் பிறப்புக்கு
கில்லுக்கும் அடிக்கும்
நடுவில் தப்பிக்க ஒரு முத்தம்
விடலையில் தொலைந்த
நினைவுகளை மீட்டெடுக்க
நித்திரையில் முத்தம்
மூணு முடிச்சு முக்திக்கு பின்
முதலாவதாய் ஒரு முத்தம்
மழலை மாதவிக்கு
மங்கையென்றே முத்தம்
முளைக்காத முட்டைக்கு
முன்கூட்டியே முத்தம்
'பா'வான பரவசத்தில்
பிஞ்சு பாதங்களில் முத்தம்
நீ ரசித்த அத்தனை நினைவிலும்
அசலும் வட்டியுமாய்
வரியோடு முத்தம்
இத்தனை முத்தங்கள்
நீ ருசித்தும்
இன்னும் எதற்கு
முரணாய் ஒரு முத்தம்
என் இறுதி படுக்கையில் !!
- சுகி

ஹைக்கூ

நினைவிலே வாழ்ந்து நிஜத்திலே தொலைந்து நித்தமும் வாழ்கிறேன் நீரில்லா கொடியாய் நீயின்றி படரும் என் நீல புன்னகையில் !!

May 31, 2017

என் சமூகம் !!



பேதையென்னும் மங்கையவள்
மலர்ச்சூட கண்டாயோ
மாலையிடும் வேலைதனில்
மெருக்கேற்ற வந்தாயோ
கன்னியிவள் கார்முகிலாய்
காலாட நடமாட
எதிர்வரும் கதிரவனை
காணாமல்  செல்வாயோ..
நேரம்காலம் பாத்துபுட்டு
நேர்த்தியா போறவளே
நெடுந்தூரம் போனாலும்
பிறைக்கு முன்னே சுடரிடவா
பொழுதின்று முடியுமுன்னே
பூமகளாய் போனவளே
ஊர்க்காண ஒழுங்கோடு
நீ இங்கு வந்திடம்மா..
கண்ணாலம் முடிச்சதுமே
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்த மன்னனுக்கு
குறைதீர்ப்பாய் பூங்கொடியே
கால் மாதம் போனபின்னும்
காட்டேரி காத்திருப்பா
கருவொன்னும் காணலேயே
கணவனைதான் பூட்டிவைப்பா..
நிறை மாசம் தாண்டும் முன்னே
புள்ளைய தான் கணிச்சிருப்பா
காளைய பெத்துப்புட்டா
கச்சேரி வெச்சிருவா
கன்னிப்புள்ள பொறந்துபுட்டா
கள்ளிப்பால் கொடுத்துப்புட்டு
கருமாரி ஆக்கிடுவா..
தப்பி பொழச்சப்புள்ள
தடுமாறி போனாலும்
தூக்குல தொங்கவுட்டு
தூர்வாரி பேசிடுவா..
நான் பாடும் தாலாட்டில்
துயில்கொள் என் கண்மணியே
துட்சன் எங்கு வந்தாலும்
வீரம்கொள் பெண்மணியே
சாந்தமாய் நான் வாழ்ந்தும்
சங்கடங்கள் பல சேர்த்த
சேரியென்னும் சமூகத்தில்
சந்தனமாய் நீ மணப்பாயோ !!


- சுகி

May 30, 2017

**☀ வெயில் ☀**



வெஞ்சொனின் வெப்பத்தில் 
 வெண்ணிறாடை மெய்யிங்கு 
கரும்பலகை போட்டுவிட
கற்றாழை பயனில்லை
கம்பங்கூழும் குளிரவில்லை 
கால்கடுக்க நடந்தாலும்
கார்மேகம் காணவில்லை 
முப்பகலாய் நீ வந்து
முழுவதுமாய் தகதகக்க
முதிர் நிலவாய் நான் மாறேன்
கதிரவனுக்கும் கருணையுண்டு 
கார்மேகத்தில் மறைவதுண்டு
கிடைகண்ட கிழங்களுக்கும் 
தப்பிக்க வழியுமுண்டு
வகைவகையாய் கவிப்பாடி
வெண்ணிலவை ரசிக்கும் நாமோ 
இன்று
வெயிலை ரசிக்க மறுப்பதேனோ ?!!

- சுகி

May 29, 2017

** திருநங்கை 👫 **


மானிடராய் பிறவிகொண்டு
மங்கை என்னும் போர்வைபூண்டு
மனிதம் தேடும் செந்நாரை 
முப்பாலாய் முகம்காட்ட..

அலி என்று அழைத்தாலும்
அள்ளி அணைக்கும் அன்னை இவள்
அரவணைத்தே பெயர்போனால்
'அரவான்' என்றே அற்பணித்தாள்..
தள்ளிப்போனு தாளிச்சாலும்
தன்னலமில்லா தங்கமிவள்
 தங்கை என்னும் மங்கையாய்
'திருநங்கை' பெயர்கொண்டாள்..

-சுகி
( திரு + மங்கை = திருநங்கை )

Image may contain: 1 person

** மூக்குத்தி **


முன்னோரு சொன்னாங்கனு
மூத்த மக விசேஷத்தை
மூணு ஊரு கூட்டிவந்து 
கண்ணாலம் பேசிப்புட்டு
முழுசா வளர்ந்த மக
மூக்கு சிந்தாம வாழணுமுன்னு
மூணு கல்லு தோடு ஒன்ன
மூணாம் மாசம் வாங்கி வந்து
முன்கோபம் வந்தாலும்
முரட்டு அடி பட்டாலும்
முந்தானை மனுஷன்கிட்ட
முந்தியடிக்க வேணாமுன்னு
நான் வளர்த்த செல்லக்கண்ணுக்கு
"மூக்குத்தி" நானும் தாரேன்
மூக்கணாம்கயிறாட்ட
கோவமெல்லாம் அடக்கிகிட்டு
மூச்சுடமா வாழு தாயி..

-சுகி

Image may contain: 1 person, close-up

May 25, 2017

**மழைக்கொரு விண்ணப்பம்**

அக்னி தேவனை அரவணைக்க
அன்பாக வந்தாயோ.. இல்லை
அல்லல்படும் மக்களுக்கு 
அமிர்தமாய் வந்தாயோ..
சுட்டெரிக்கும் சூரியனுக்கு
சுடரேற்ற வந்தாயோ.. இல்லை
சருகாய் மடியும் சமானியனின்
சந்தோஷமாய் வந்தாயோ..
பளிச்சன்று பல்லை காட்டும்
பகலவனுக்கு பன்னீராய் வந்தாயோ.. இல்லை
பசுமை மைந்தர்களின் கண்ணீருக்கு
பால் வார்க்க வந்தாயோ..
விடியுமுன் விளையாட்டாயின்றி
வரவேற்பாய் வந்துவிடு..
துவண்டு போன உயிர்களுக்கு
துளியாய் வந்து புத்துயிராய் மாறிவிடு..
களம் காணும் உழவனுக்கு
கஞ்சி ஊற்றவாவது கண்ணீர் விடு..
காலம் கடந்தும் காத்திருக்கும் எங்களுக்கு
கருணையோடு விடைக்கொடு..