July 6, 2017

முரணாய் ஒரு முத்தம் !!


அன்னையின் அரவணைப்பில்
அன்பாய் ஒரு முத்தம்
தங்கமென்ன அழைக்கும்
தாத்தாவின் தாங்குதலில்
ஆசையாய் ஒரு முத்தம்
பள்ளிக்கு முன்
பரவசத்தில் முத்தம்
விளையாட்டு கொஞ்சலில்
வரிசையாய் முத்தம்
பிஞ்சில் கைகோர்த்த
உடன் பிறப்புக்கு
கில்லுக்கும் அடிக்கும்
நடுவில் தப்பிக்க ஒரு முத்தம்
விடலையில் தொலைந்த
நினைவுகளை மீட்டெடுக்க
நித்திரையில் முத்தம்
மூணு முடிச்சு முக்திக்கு பின்
முதலாவதாய் ஒரு முத்தம்
மழலை மாதவிக்கு
மங்கையென்றே முத்தம்
முளைக்காத முட்டைக்கு
முன்கூட்டியே முத்தம்
'பா'வான பரவசத்தில்
பிஞ்சு பாதங்களில் முத்தம்
நீ ரசித்த அத்தனை நினைவிலும்
அசலும் வட்டியுமாய்
வரியோடு முத்தம்
இத்தனை முத்தங்கள்
நீ ருசித்தும்
இன்னும் எதற்கு
முரணாய் ஒரு முத்தம்
என் இறுதி படுக்கையில் !!
- சுகி

No comments:

Post a Comment