December 12, 2010

என் வாழ்கை ...

வாழ்கையில் சந்தோசம் என்பதோ சில நிமிடம்
வாழும் நாள் முழுதும் சந்தோசம் தொடர
வாழ எண்ணினேன் உன்னை நினைத்து .....
வருந்த வைத்து விட்டாய்
என் வாழ்கையில் நீ
வெறும் வழிபோக்கன் என்று ....
வாடுகிறேன் உன் நினைவில்
மறக்க மனம் இன்றி  .....
முள்ளும் எனக்கு வலிக்கவில்லை
நீ என் உடன் இருக்கும் போது
இன்று என் மீது பாயும் காற்றே
என்னை கொல்கிறது
உன் நிழல் கூட என்னிடம் இல்லை என்று ..
வாழ்கையில் நான் கொண்ட முதல் காதல் நீ
முற்றும் நீ என நினைத்த எனக்கு
உன் வார்த்தைகள் வழி சொல்ல வில்லை
நான் ஏன் வாழவேண்டும் என்று...
உன்மீது நான் கொண்ட காதல்
என்றும் மாறாது
மறையவும் இயலாது ..
சில நொடிகளில்
மரணத்தை கையில் எடுத்தல் ஆவது
என் காதல் உனக்கு புரியும் என்று நினைத்தேன்
நான் செய்த சத்தியத்தையும் மறந்து ..

இன்று உனக்காக வாழும் என்னை
ஏற்று கொள்வாயா உன் மனைவியாக ?
உன் உடன் ஒரு நொடி வாழ்ந்தால் போதும்
மரணிக்கவும் நான் தயார் ..
என் காதல் என்னை கொள்ளுமுன்
என் அன்பை புரிந்துகொள்வாயா அன்பே ..?
நீ என் வாழ்வில் என்றும் வேண்டும்
உன் உயிராய் நான் இனி வாழ்ந்திட வேண்டும் .

காயப்பட்ட இதயத்தின் கண்ணீர் வரிகள்.....

என் இதயம் இரும்பாக தான் இருந்தது 
உன் நேசம் காந்தமாக என்னை கவரும் வரை .....

வறண்ட நிலமாக தான் இருந்தது
நீ மழையாய் என்னுள் விழும் வரை .....

சாதகப் பறவை போன்று சுற்றி திரிந்தேன்
இன்னிசையாய் நீ என் வாழ்வில் வரும் வரை.....

குளிர் காற்றாய் நீ என் மீது பாயும் போது
குளிர்ந்து போனது என் இதயம் ....

இன்றோ அந்த இனிமை நிறைந்த தென்றலை எண்ணி 
கண்ணீர் வடிகின்றது என் இதயம் ...

காலம் முழுதும் கண் விழித்து காத்திருப்பேன்
நாம் காவியம் படைக்கும் வரை ......!

December 11, 2010

இவன் தான் கடவுள் !!


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

வாழ்வின் திசை மாற்றம் !!

அரை ஜான் அளவில் கருவறை
அள்ளி முத்தமிடும் தாயின் கையில் சொர்க்கம்
கேட்டதை வாங்கித்தரும் தந்தை தெய்வம்
காலம் முழுவதும் கை கொடுக்கும் கல்வி
சின்ன சின்ன சண்டைகள்
சிரிக்க வைக்கும் சிந்தனைகள்
கண்ணீரை துடைக்கும் கரங்கள்
காதல் கீதம் கொண்ட நெஞ்சம்
நண்பர்கள் உறவாக
நெஞ்சங்கள் மகிழ்வூட்ட
நொடி முழுவதும் நிம்மதி சந்தோசம்
கவி பாடும் பறவையாய்
காலம் முழுவதும் வாழ எண்ணிய நான்
இன்று...
வர்த்தகம் தேடி வாழ்கை அமைத்தேன்
கை நிறைய பணம்
கார் வீடு என்று அத்தனை வசதியும் கொண்டேன்
காலத்தின் திசை மாற்றமோ
இல்லை என் மனதின் திசை மாற்றமோ
என் மனதில் துளியும் சந்தோசம் இல்லை
பெற்ற பிள்ளையின் பரிவும் இல்லை
மணம் புரிந்த துணையின் காதலும் இல்லை

இப்போது எண்ணுகிறேன்
எதற்கு இந்த கணினி பொறியாளர் என்ற பட்டம்
என் பிள்ளை விட்டு விளையாடும்
பட்டம் திசை மாறி பறப்பதை கண்டு !!

இலங்கை


அடக்க வேண்டுமென்று
அரசு சிங்கங்கள்...
ஆட்சியை கொண்டு அள்ளி வீசுகிறது
சிங்கள தமிழர்களை ...
ஆதரவோடு பொங்கி போராடும் புலிகள் ....
போரட்டத்தின் முடிவு
பலியாகும் அப்பாவி மக்கள்...
இரத்தத்தில் இலங்கை மிதந்தாலும்
இதழ்களில் புன்னகையோடு அமைதியாய்
காத்திருக்கிறார் புத்தர்
சிங்கமும் புலியும் மனிதனாக மாறவேண்டுமென்று ....

கவலைகள் மறந்த காலம் !!!

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

நிறம் தான் வாழ்க்கையா...???


சிவப்பு மனிதனின் நிழலும் கருப்பு தான்
கருப்பு மனிதனின் ரத்தமும் சிவப்பு தான் 
நிறத்தில் இல்லை நமது வாழ்க்கை 
மனித எண்ணத்தில் உள்ளது வாழ்க்கை !!

கோவையில் மக்கள் !!

குடைகள் போல் நிழல்
பரிமாறிக் கொண்டிருந்த
பெரு மரங்களையெல்லாம்
நான்கு வழிப் பயணத்துக்காக,
பிடுங்கியெறிந்து
பறவைகளையும் பசுமைகளையும்
விரட்டி அடித்தாயிற்று.

நீள அகலங்களை
அளவு நாடாக்களில் அளந்தும்
தொன்மக் குடிகளின் மீது
அம்புக் குறிகளிட்டும்
அப்பாவி மக்களை
அப்புறப்படுத்தியாயிற்று.

பச்சை வயல்களில்
கட்டிடங்களை விளைவித்துக்கொள்ள
குளிர்சாதன அறைகளில்
தலைவர்களிடையே
கையொப்பங்கள் பரிமாறியாயிற்று.

பூர்வீகத்தைத் தொலைத்த
மண்ணின் மைந்தர்களை
உளைச்சல் மிகுந்த உள்ளத்தோடு
நகர்ப்புறங்களில்
அகதிகளாக்கியாயிற்று.

மரங்களை இழந்த பறவைகளும்
இயற்கையை இழந்த மனிதனும்
தங்களது மொழியினை மறந்தபடி
காலத்தின் வேகத்துக்கு
அடிபணிந்து அன்னத்திற்காக
பறந்து கொண்டிருக்கின்றனர்
மவுனத்தைச் சுமந்தபடி.

சிந்தனை செய் மனமே…

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்க தோற்றால் வாழ்கையே இழப்பு !
நீ பிறந்து தரித்திரமாக இருந்தாலும்
வாழ்வது சரித்திரமாக இருக்க வேண்டும் !
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை . .
ஆனால் அதற்கான தகுதி அனைவர்க்கும் உண்டு . . . முயன்றால் !
வாய்ப்புகளை பெறுபவன் அதிர்ஷ்டசாலி
உருவாக்குபவன் புத்திசாலி
அதனை தக்க சமயத்தில் பயன்படுத்தி கொள்பவனே திறமைசாலி !
நேற்று நடந்ததை நினைத்திருந்தால்
நாளை நடப்பது பிழையாகும் !
சிந்தித்து செயல்படு தோழனே வெற்றி உமக்கே !!

கடல்தாண்டி செல்லும் கனவுகளுடன் நான் ....

கண்கள் பேசும் காதல்மொழியும்
கன்னியின் மனதில் தோன்றும் கனவுகளும்
அழகாய் மலரும் நாளே
தித்திக்கும் திருமண நாள் !!

கண்களில் சந்தோசம் வருத்தம்
மாறிமாறி வந்து போக
மனம் கவர்ந்த மணவாளன் கரம் பிடித்து
தாயே உன்னை தனித்து விட்டு செல்கிறேன் ...

திருமதியாக திருமண உறவு…
வெகுமதியாக வெளிநாடு வரவு..!
தூரமானது அப்பாவின் நகைச்சுவை…
ஏக்கமானது அம்மாவின் அறுசுவை..!

அரபுமொழி பேசும் அந்நிய
முகம் கண்டு படபடப்பு…
அமுதமொழி பேசும் அன்பு
முகம் தேடி பரிதவிப்பு..

உள்ளம் நிறைந்த பூரிப்பில்
உறவுகளோடு விழாக்கள் அங்கே..
உதடு பிரியா புன்னகையில்
புதியவரோடு விருந்துகள் இங்கே

துவைக்க ,பாத்திரமலச பட்டன்
தட்டும் இயந்திர வாழ்க்கையிங்கே..
அம்மாவுக்கு உதவியாய் துவைத்தலசிய
இனிமையான இயல்பு வாழ்க்கையங்கே..

அதிகாலை ஆலய மணி
ஒசை கேட்டது அங்கே..
பின்காலை அலார மணி
ஓசை கேட்கிறது இங்கே..

குதூகலமாய் குடும்பத்தோடு நிலாச்சோறு
உண்டு களித்தது அங்கே..
அமைதியாய் கணவரோடு கணினிச்சோறு
உண்டு களிப்பது இங்கே…

ஆதரவாய் தலை சாய்க்க
அம்மா மடி அங்கே..
தனிமையிலே தலை புதைக்க
தலையணை மடி இங்கே

அண்டை வீட்டில் அறியா முகங்கள்
பேசவும் முடியா புது மொழிகள்
விடியுமுன் வேலை செல்லும் கணவன்
நடுநிசி வரை வெற்றுச்சுவர்களோடு நான்..!!

இணைய உலாவலில் தொடங்கி
தொலைக்காட்சித் தொடரில் தொலைந்து
தனக்குள் பேசி தானாகச் சிரித்து
தானே சமைத்து தனியாக உண்டு
தனிமையோடுப் போராடினேன் தனியாக...!!

அக்கறைப்படவும் ஆளில்லை
அவசரத்தில் உதவவும் யாருமில்லை
அம்மாவிடம் பேசும் போது மட்டும்
அழுகையை அடக்கம் செய்துவிட்டு
வாய் வலிக்கும் சிரிப்போடு
"ஆகாயம் தொடும் கட்டிடங்கள்
அரண்மனை போல் வீடு
அருமையான நாடு
சொர்க்கத்தில் வாசம்" என்ற பொய்களோடு..!!

வெளிநாட்டில் வாழ்க்கை
வளமான வசதிகளோடு
கை நிறையப் பணத்தோடு
மனிதர்களோ அசுர வேகத்தோடு..!!

மனது மட்டும்- எப்போதும்
வெறுமையோடும்!! ஏக்கத்தோடும்..!!
மனசுக்குள் ஊரின் வாசம்..
மழையில் ஊறிய மண்வாசமாய்….!!

கடல்தாண்டி செல்லும் கனவுகள் யாவும்
கண்முன்னே வந்து நிற்க
ஏங்குகிறேன் அம்மா மடியில்
மீண்டும் ஒருகணம் தலை சாய்க்க....

நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் மீது கொண்ட காதலால் ....
இன்று உணர்வே இல்லாமல் தவிக்கிறேன் ..
நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் மீது வைத்த அன்பை
மறக்கவும் முடியவில்லை ...
மறைக்கவும் முடியவில்லை ...
இருந்தாலும் மறக்கின்றேன் ..
மறைகின்றேன் உன் முன்னிலையில் ..
நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் மனமோ வேறொரு சிந்தனையில்
நான் உன் சொந்தமாய் இருக்க விரும்புகிறேன் ...
காலம் வரும் வரை
என் உணர்வை மறைகிறேன் ...
நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் நிழல் என் மீது விழ
என்னை மறைத்து உன்னை பார்க்க விரும்புகிறேன்
உன் நிழல் கூட என்னில் தொலையாதா படி பார்க்கின்றேன்...
நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் மீது நான் கொண்ட காதல்
உன் மீது நான் வைத்த பாசம்
உன் மீது நான் காட்டும் அன்பு
உனக்கு புரியவில்லையா ?
எனக்கு நீ இல்லாவிட்டாலும் ...
என் நினைவுகளில் நீ வேண்டும் என்பதற்காகவே
உயிரில் கலந்த உன்னை ...
உணர்வில் நிலைத்த உன்னை ...
மனதுக்குள் சுமப்பேனே ...
இனி வரும் நொடி தோறும் !!

காத்திருக்கும் என் காதல்..

என் கவிதைகளுக்கும்
காதலுக்கும்
கனவுகலுக்கும்
நாயகனாகிய நீ
நிஜத்தில் என்
நாயகனாவது எப்போது
என் விழிகளோடு
பேசிய நீ
என் இதயத்தோடு
பேசுவது எப்போது
என்னை பின்தொடர்ந்து
வரும் நீ உரிமையோடு
என் கரம் பிடித்து
நடப்பது எப்போது
எப்போது
எப்போது ??

காத்திருப்பேன் காதலுடன்
கரம் பிடிப்பேன் நம் நினைவுகளுடன் !! 

பெண்ணே நீ !!

தாய்மை என்னும் வரம் பெற்று
தாரகையாய் மண்ணில் தோன்றி
தன்னலம் சிறிதும் இன்றி
தன் குடும்பம் என்ற ஒரு இலக்கை கொண்டு
மாடாய் உழைத்த பெண்களுக்கு
மானிட வர்க்கம்  தந்த பரிசு அடுப்படி
ஆண் பிள்ளையை பெற்று எடுத்தல்
போற்றி பாடுமடி
பெண் பிள்ளை பெற்று எடுத்தல்
கள்ளி பால் உட்டுமடி
தான் பெற்ற பிள்ளையை கொஞ்சவும்
உரிமை இல்லை
மீறி பேசினால் கட்டிய கணவனும்
சொந்தமில்லை
கண்ணீர் வடிக்கும் பெண்ணே
உன் கஷ்டங்களை கண்டு நான் கண்ணீர் வடிக்கவா
இல்லை உன்னை போன்ற பூமாதேவியை
பெற்ற இந்த பெண் வர்க்கத்தை எண்ணி பெருமை கொள்ளவா  ???




Image may contain: 2 people

மீண்டும் கல்லூரிக்கு போகலாம் !!

பிரியவும் மனமில்லை
நாட்குறிப்பிலும் நேரமில்லை
காலத்தின் ஓட்டத்தில்
கல்வியை கண்ணாய் பார்க்க
முன்னேற்றம் என்ற ஒன்றை மட்டும்
நித்தமும் சிந்தித்து
என் வாழ்வு வளமாய்
சிறக்க என்னும்
உங்கள் ஆசிகளை
இனிதே நிஜமாய் பலித்திட
மீண்டும் செல்கிறேன்
என் கல்லூரி வாசலை தேடி
வெற்றிகள் யாவும்
வந்து சேரட்டும்
என் வழி தேடி ...!!

நட்பு

என் கண்முன் தெரிந்த சித்திரமே ...
சிறு பனித்துளியாய்
என்னுள் நீ கலந்து விட்டாய் ...
காரணம் விலங்காது நிக்கயிலே
ஒரு புன்னகை சிந்தி
என்னை மயங்க வைத்தாய்...
நித்தம் பார்க்க துடிக்கையிலே
என் கண்முன்னே வந்து நீ இருந்தாய் ...
கவலையாய் நான் இங்கு இருக்கையிலே
கலங்கியே என்னுடன் நின்று இருப்பாய் ...
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
என் மனம் முழுதும் நீயே பரப்பிருபாய் ...
மௌனம் என்ற ஒன்றை மட்டும்
அழகாய் வைத்து சிரித்து இருப்பாய் ...
நட்பு என்ற ஒன்றை மட்டும்
உன் வாழ்வின் ஒளியாய் ரசித்திருப்பாய் ...

உன்னோடு நான் ...! ( என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி )

உன்னோடு காலம் முழுவதும்
நான் வாழ்ந்திட நினைத்தேன்...
ஏனோ கால் நிமிடம் கூட
நீ என் அருகில் இல்லை!

உன் தோளோடு தோள் சேர்த்து
நடந்திட நினைத்தேன்...
ஏனோ உன் கால்போன சுவடுகூட
கண்ணில் தென்படவில்லை!

உன்னை கண்ணின் மணியாக
காத்திட நினைத்தேன்...
ஏனோ, இமை உதிர்க்கும்
ரோமமாகக் கூட
நீ என்னை கருதியதில்லை!

உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் நினைத்தேன்...
ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட
நீ என்னை அழைத்திடவில்லை!

உன் அரியணையில் அரசியாகவே
வீற்றிருக்க நினைத்திருந்தேன்...
ஏனோ, ஒரு சேவகியாகக் கூட
நீ என்னை அனுமதிக்கவில்லை!

உன் தாகம் தீர்த்திடும் கனிரசமாக
நான் மாறிட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம்
கழுவும், நீராகக் கூட
நீ என்னை பாவிக்கவில்லை!

உன் கழுத்தை
அலங்கரிக்கும் ரோஜாவாக
நான் மலர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம் மிதிக்கும்
சருகாகக் கூட
நீ என்னை தீண்டிடவில்லை!

உன் முன் ஒரு சிகரமாகவே ஓங்கி
நிமிர்ந்திட முயன்றேன்...
ஏனோ, சிறு
குன்றாகக் கூட வளராமல்
உதிர்ந்து போனேன்!

ஒரு காவியமாகவே உன்னுள்
கலந்திட நினைத்தேன்...
ஏனோ, ஒரு ஓவியமாகக் கூட
உன் நின் நிலைக்காமல்
கலைந்து போனேன்!

உன் சரித்திர நாயகியாய்
திகழ்ந்திட நான்
வியூகம் வகுத்தேன்...
ஏனோ, ஒரு சொல்லாகக் கூட
ஏட்டில் இடம் பெறாது போனேன்!

உன் கனவிலும் நானே வந்து
உன்னை தழுவிட நினைத்தேன்...
ஏனோ, உன் நினைவில் கூட
சரியாக நில்லாமல்
நழுவிப் போனேன்!

உன்னோடு நான் ...! ( உயிரே உன்னுள் நானாக நீ இருக்கும் நொடி )

உன்னோடு காலம்
முழுவதும் நான் வாழ்ந்திட
நாள் தவறாது கனவுகாண்கிறேன் ...
உன் தோளோடு தோள் சேர்த்து
நடந்திட நித்தமும் நினைக்கிறேன் ...
உன்னை என்றும்
என் கண்ணின் மணியாய்
காத்திட நிழலை கூட நேசிக்கிறேன் ...
உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் வேண்டுகிறேன் ...
உன் அரியணையில்
அரசி என்னும் சேவகியாய்
வீற்றிருக்க நினைத்திருப்பேன் ...
உன் தாகம் தீர்த்திடும் கனிரசமாக
நான் மாறி விழித்திருப்பேன் ...
ஒரு காவியமாகவே உன்னுள்
கலந்திட சித்திரமாய் நின்றிருப்பேன் ...
உன் கனவிலும் நானே வந்து
உன்னை தழுவிட
காதல் தாளம் போட்டிருப்பேன் ...
உன்னோடு நான் இணைந்து
உயிராக கலந்திருப்பேன்...!!