May 31, 2017

என் சமூகம் !!



பேதையென்னும் மங்கையவள்
மலர்ச்சூட கண்டாயோ
மாலையிடும் வேலைதனில்
மெருக்கேற்ற வந்தாயோ
கன்னியிவள் கார்முகிலாய்
காலாட நடமாட
எதிர்வரும் கதிரவனை
காணாமல்  செல்வாயோ..
நேரம்காலம் பாத்துபுட்டு
நேர்த்தியா போறவளே
நெடுந்தூரம் போனாலும்
பிறைக்கு முன்னே சுடரிடவா
பொழுதின்று முடியுமுன்னே
பூமகளாய் போனவளே
ஊர்க்காண ஒழுங்கோடு
நீ இங்கு வந்திடம்மா..
கண்ணாலம் முடிச்சதுமே
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்த மன்னனுக்கு
குறைதீர்ப்பாய் பூங்கொடியே
கால் மாதம் போனபின்னும்
காட்டேரி காத்திருப்பா
கருவொன்னும் காணலேயே
கணவனைதான் பூட்டிவைப்பா..
நிறை மாசம் தாண்டும் முன்னே
புள்ளைய தான் கணிச்சிருப்பா
காளைய பெத்துப்புட்டா
கச்சேரி வெச்சிருவா
கன்னிப்புள்ள பொறந்துபுட்டா
கள்ளிப்பால் கொடுத்துப்புட்டு
கருமாரி ஆக்கிடுவா..
தப்பி பொழச்சப்புள்ள
தடுமாறி போனாலும்
தூக்குல தொங்கவுட்டு
தூர்வாரி பேசிடுவா..
நான் பாடும் தாலாட்டில்
துயில்கொள் என் கண்மணியே
துட்சன் எங்கு வந்தாலும்
வீரம்கொள் பெண்மணியே
சாந்தமாய் நான் வாழ்ந்தும்
சங்கடங்கள் பல சேர்த்த
சேரியென்னும் சமூகத்தில்
சந்தனமாய் நீ மணப்பாயோ !!


- சுகி

May 30, 2017

**☀ வெயில் ☀**



வெஞ்சொனின் வெப்பத்தில் 
 வெண்ணிறாடை மெய்யிங்கு 
கரும்பலகை போட்டுவிட
கற்றாழை பயனில்லை
கம்பங்கூழும் குளிரவில்லை 
கால்கடுக்க நடந்தாலும்
கார்மேகம் காணவில்லை 
முப்பகலாய் நீ வந்து
முழுவதுமாய் தகதகக்க
முதிர் நிலவாய் நான் மாறேன்
கதிரவனுக்கும் கருணையுண்டு 
கார்மேகத்தில் மறைவதுண்டு
கிடைகண்ட கிழங்களுக்கும் 
தப்பிக்க வழியுமுண்டு
வகைவகையாய் கவிப்பாடி
வெண்ணிலவை ரசிக்கும் நாமோ 
இன்று
வெயிலை ரசிக்க மறுப்பதேனோ ?!!

- சுகி

May 29, 2017

** திருநங்கை 👫 **


மானிடராய் பிறவிகொண்டு
மங்கை என்னும் போர்வைபூண்டு
மனிதம் தேடும் செந்நாரை 
முப்பாலாய் முகம்காட்ட..

அலி என்று அழைத்தாலும்
அள்ளி அணைக்கும் அன்னை இவள்
அரவணைத்தே பெயர்போனால்
'அரவான்' என்றே அற்பணித்தாள்..
தள்ளிப்போனு தாளிச்சாலும்
தன்னலமில்லா தங்கமிவள்
 தங்கை என்னும் மங்கையாய்
'திருநங்கை' பெயர்கொண்டாள்..

-சுகி
( திரு + மங்கை = திருநங்கை )

Image may contain: 1 person

** மூக்குத்தி **


முன்னோரு சொன்னாங்கனு
மூத்த மக விசேஷத்தை
மூணு ஊரு கூட்டிவந்து 
கண்ணாலம் பேசிப்புட்டு
முழுசா வளர்ந்த மக
மூக்கு சிந்தாம வாழணுமுன்னு
மூணு கல்லு தோடு ஒன்ன
மூணாம் மாசம் வாங்கி வந்து
முன்கோபம் வந்தாலும்
முரட்டு அடி பட்டாலும்
முந்தானை மனுஷன்கிட்ட
முந்தியடிக்க வேணாமுன்னு
நான் வளர்த்த செல்லக்கண்ணுக்கு
"மூக்குத்தி" நானும் தாரேன்
மூக்கணாம்கயிறாட்ட
கோவமெல்லாம் அடக்கிகிட்டு
மூச்சுடமா வாழு தாயி..

-சுகி

Image may contain: 1 person, close-up

May 25, 2017

**மழைக்கொரு விண்ணப்பம்**

அக்னி தேவனை அரவணைக்க
அன்பாக வந்தாயோ.. இல்லை
அல்லல்படும் மக்களுக்கு 
அமிர்தமாய் வந்தாயோ..
சுட்டெரிக்கும் சூரியனுக்கு
சுடரேற்ற வந்தாயோ.. இல்லை
சருகாய் மடியும் சமானியனின்
சந்தோஷமாய் வந்தாயோ..
பளிச்சன்று பல்லை காட்டும்
பகலவனுக்கு பன்னீராய் வந்தாயோ.. இல்லை
பசுமை மைந்தர்களின் கண்ணீருக்கு
பால் வார்க்க வந்தாயோ..
விடியுமுன் விளையாட்டாயின்றி
வரவேற்பாய் வந்துவிடு..
துவண்டு போன உயிர்களுக்கு
துளியாய் வந்து புத்துயிராய் மாறிவிடு..
களம் காணும் உழவனுக்கு
கஞ்சி ஊற்றவாவது கண்ணீர் விடு..
காலம் கடந்தும் காத்திருக்கும் எங்களுக்கு
கருணையோடு விடைக்கொடு..

October 19, 2016

நா முத்துக்குமார்

மெய் மறந்து தான் போயிருந்தேன்
உன் பாடல் வரிகள்
ஒவ்வொன்றிலும்...
உவமைகளை அழகாய் கோர்த்து
உணர்வுகளை வார்த்தையால் இணைத்து
உறவுகளை ஒன்றிணைத்தாய்...
நீ சொன்ன கவியாவும்
நங்கூரமாய் எங்கள் மனதில்...
வலியாய் நீ மறைந்தாலும்
வார்த்தைகளால் என்றும் வாழ்வாய் எங்கள் நினைவுகளில்...

அவள்

கருவாய் உயிர் பெற்ற
நாள் தொடங்கி
கல்லறை உறக்கம் காணும் வரை
கண்ணீரையும்
கலக்கத்தையும் நிறைவாய்
கொண்டவள் இவள்...
பிஞ்சாய்
பிறந்த நாள் தோறும்
பெண் பிள்ளை தூற்றலை
பெற்றவள் இவள்...
கள்ளமில்லா சிரிப்பிலும்
கால் கொலுசு சத்தத்திலும்
பெற்றவளை
மகிழ்விற்கும் மழலை இவள்...
காலத்தின் ஓட்டத்தில்
மழலையில் இருந்து மங்கையாய்
மலர் சூடிய மலை நாட்டு இளவரசி இவள். . .
பருவங்கள் மாற மாற
உணர்வுகளின் உபாதைகளாய்
உடலிலும் மனதிலும்
மாற்றங்கள் வெளிபட
கலைப்பற்று வாடும் பூமகள் இவள்...
வரமாய் பெற்ற கர்ப்பகத்தை
வலியால் உணர்ந்தும்
மனதால் மெலிந்தும்
பொறுத்து கொள்ளும் பூமாதேவி இவள். . .
மணம் கொண்ட மணாளனுக்கு
மலராய் பூத்தும்
வாழவந்த வீட்டிற்கு பூ மணத்
தென்றலாய் வீசும்
வசந்தம் இவள். . .
போற்றலும் தூற்றலும்
எதுவாயிருப்பின்
பெண்ணாய் பிறந்த பிறவிபலனை
கருவாய்
சுமக்கும் அன்னை இவள். . .
பன்முக
பராசக்தியாய்
பல பாவனைகள் கொண்ட
இத்தனை இவள்களும்
ஒரு உயிராய்
இருக்கிறாள்
அவள் என்ற தோற்றத்தில். . .

மொழி

'சேறு' என்ற வார்த்தையை உருவாக்கி, 
அதில் 
"கால்" வைத்தால் தான் 
'சோறு' ஆகும்
எனும் நுட்பமான மொழி
'தமிழ்' ! :)

October 17, 2016

நட்புக்குள்ளே...


அன்புக்கு பாத்திகட்டி
அசைவில்லா நட்புக்கு
வேரூன்றி நீயும் நின்றாய்
நான் போடும் பாதைகளுக்கு பகட்டிரவிலும் பளிச்சிட்ட வெளிச்சமாய்
பல தூரம் நீ நடந்தாய்...

நட்பெனும் அதிகாரத்தில்
'அ'கரமாய் நிலைத்தும்
ஆழ்கடல் ஆழத்தில்
அகதியாய் தொலைந்தும்
நம்பிக்கைக்கு வித்தாய் இருந்த நம் நட்பு...

அகண்டமாய் விரிந்த
உன் நட்புலகில் அரிதாய் மாற
கண் சிமிட்டும் நேரத்தில் வேற்றுவனாய் நிறுத்திவிட்டாய்...

நட்புக்கு இலக்கணமாய்
நம்பிக்கையாய் நானிருக்க
வார்த்தைகளால் சுட்டெரித்தாய்
வலி மாறா வடு இது தான் என்று
அறிவுக்கும் புகட்டிவிட்டாய்...

புன்னகையுடன் பயணிக்கிறேன்
என் வழி நடுவே
காத்திருக்கும் முற்களை
புஷ்பங்களாக பார்த்திட...

கடலை சட்னி

கருமணல் காட்டுக்குள்ளே
கொத்து கொத்தாய் விளைஞ்ச முத்து..
கருப்புச் சட்டி வாணலியில்
ஊர் மணக்க தாளமிட..
கொப்பரக்காய் கொரகொரப்பு
கொஞ்சம் வந்து நா சுவைக்க..
காரமாய் நீ சேர்த்த
வற்றல் எல்லாம் வாய் எரிக்க..
அத்தை மகள் நீ வந்து
இலை போட்டு பரிமாற..
உன் கை பட்ட கடலை சட்னி
நாவில் பட்டு மெய் மறக்க
தடம் பார்த்து காத்திருந்தேன்
இன்னும் ஒரு இட்லிக்காக...

Image may contain: one or more people